நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும், தடையை மீறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில், 'கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை அனுமதிக்கக்கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடிக்கவேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் ஒரு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், விவசாய சங்கத்தினரோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, விவசாய சங்கத்தினருக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆனாலும் போலீஸாரின் தடுப்பை மீறி விவசாயிகள் அதே இடத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, "காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடிக்க வேண்டும், 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும், நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.