அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியான கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய வயல்வெளியில் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் முத்து, உத்திராபதி, வளர்மதி, ஆனந்த், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், ‘பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். நெற்பயிர்கள் பாதிப்புக்குக் காரணமாக உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் - கள்ளூர் சாலையில் தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும். மேலும், ஓடைகளை சரியான முறையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல் வயல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வுசெய்ய வேளாண்துறை அதிகாரிகளை அனுப்பிவைத்து வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சுவது போல உள்ள விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல்படுத்திட வேண்டும். முறையாக ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.