கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் கோரைப்புல் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள நெரூர், திருமுக்கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்புல் இரகத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கோரைப்புல் பயிரானது பாய்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ள நீரால் திருமுக்கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோரைப்புல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான கோரைப்புல் சேதம் அடையும் சூழ்நிலையில் உள்ளதால், அவசரகதியில் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையின் காரணத்தால் கோரைப்புல் அதிகளவில் சேதம் அடைந்தது. அதேபோல் நேற்று பெய்த மழையாலும் காவேரி மற்றும் அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காலும் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான கோரை பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாய பகுதி நிலங்களை தமிழக அரசு நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.