வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பலமணி நேரமாக மழை பெய்துவருகிறது. குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாக இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் உறைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக மழை பெய்துவருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படியே நேற்று (22.08.2021) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், பகல் 11 மணிக்கு மேல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த பலத்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
மேலும், முன்குறுவை சாகுபடி செய்து அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் மழையினால் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு வேதனை அடைகின்றனர். அதேநேரம், பின்குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளோ பயிர்களுக்குப் பொருத்தமான மழை என மகிழ்கின்றனர். இதேபோல் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள விவசாயிகளும் மழைப் பொழிவினால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.