கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது வடசெட்டியேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி(40). இவர் விவசாயப் பணி செலவினங்களுக்காக ஏற்கனவே தனது குடும்பத்தினர் நகைகளைக் கொண்டு சென்று சங்கராபுரம் நகரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகைகளை மீட்பதற்காக 40 ஆயிரம் பணத்தை வீட்டில் இருந்து கைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சங்கராபுரம் வங்கிக்குச் சென்றார்.
அங்கு சென்று பார்த்த போது தான் வைத்திருந்த பணப் பையைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த முனுசாமி சந்திராபுரம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழுவம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன்-காயத்ரி தம்பதியர் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் பணம் இருப்பது தெரியவந்ததையடுத்து தம்பதியர் இருவரும் சங்கராபுரம் காவல் நிலையம் சென்று தாங்கள் கண்டெடுத்த பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைக் கண்டு வியப்படைந்த போலீசார் பணத்தை தவற விட்ட விவசாயி முனுசாமிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் முன்னிலையில் விவசாயி முனுசாமி தவற விட்ட பணத்தைக் கண்டெடுத்த அந்த இளம் தம்பதியர் கைகளாலேயே முனுசாமியிடம் ஒப்படைத்தனர்.