கம்யூனிஸ்ட் செயல்வீரர், கவிஞர், சின்னத்திரை இயக்குநர், திரைப்பட நடிகர் எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிதாபாரதி.இவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இயக்குநர் கெளதம் வாசுதேவ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்பு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில், "மதிசுதா என்பவர் ஈழத்துத் திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன் உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
எனினும் ஈழத்திரையுலகம் வணிகரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான். இந்நிலையில் 100- க்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பெயர் வெந்து தணிந்தது காடு- 'மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன.' என்ற விளக்கத்தோடு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறான். அந்த கலைப் போராளி, இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது.
மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது. ஒரு எளிய கலைஞனை அங்கீகரித்து பெருந்தன்மையோடு உங்கள் தலைப்பை மாற்றிக் கொண்டால் வரலாறு உங்களை வாழ்த்தும்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.