திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, தனது தொகுதி மக்களுக்காக திருவண்ணாமலை நகரில் இலவச தையற்பயிற்சிப் பள்ளியை 2015ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான மகளிர், பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கரோனாவால் மூடிவைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பள்ளி, சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் செயல்படத் துவங்கியது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. அதனையொட்டி, முன்னால் அமைச்சர் எ.வ.வேலு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசும்போது, “இந்த தையற் பயிற்சிப் பள்ளி துவங்கி 6ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 5,000க்கும் மேற்பட்ட சகோதரிகள் பயிற்சி முடித்து, சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
ஒரு நாளைக்கு 4 தொகுப்பு முறையில் 6 மாதப் பயிற்சியாக இங்கு தையற் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த தையற் பயற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவும், வெளியில் சென்றும் வேலைசெய்து தன்னுடைய குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். ஆண்களைவிட, பெண்கள் எப்போதுமே திறமையானவர்கள், காரணம் எப்பொழுதுமே 10 வகுப்பு பொதுத் தேர்விலும் சரி, 12 வகுப்பு பொதுத் தேர்விலும் சரி முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண்கள் பெறுபவர்கள் யார் என்று பார்த்தால் மாணவிகளாகத்தான் இருப்பார்கள். மூன்றாம் மதிப்பெண்கள்தான் மாணவர்கள் இருப்பார்கள்.
ஒரு காலத்தில் பெண்களை, ஆண்கள் அடக்கி ஆள்கிற நிலை இருந்தது. அப்போது நமக்கு கிடைத்தவர்தான் தந்தை பெரியார். 'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற பழமொழியை மாற்றி, அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார். ஒவ்வொரு பெண்ணும் படித்தால்தான் அந்த குடும்பம் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்று கூறினார். தையற் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தருவதன் மூலம் அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
ஒவ்வொரு குடும்பத் தலைவியின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த தையற் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்த தையற் பயிற்சிப் பள்ளியை மென்மேலும் விரிவுபடுத்தும் எண்ணமும் எனக்கு உண்டு” என்றார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ, டாக்டர் அனுராதா ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் செல்லங்குப்பம் சுப்பிரமணியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.