புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் பள்ளியில் விளையாட்டு, கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.
அப்பொழுது பேசிய அமைச்சர், ''ஒவ்வொரு பள்ளியிலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகமான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதிகமான மரங்கள் இருக்கும் பள்ளிகளில் மின் விசிறிகளுக்கு பதிலாக மரங்கள் சுத்தமான காற்றை கொடுக்கும். மின்சாரம் சேமிப்பும் ஆகும். பள்ளி மாணவர்களை படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் செஸ், கேரம் போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தி அவர்களை விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும். அப்போது தான் அந்த மாணவர்கள் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் சிறப்பாக வளர முடியும். செஸ் விளையாட்டு என்பது மிகவும் அவசியமானது. விளையாட்டில் சாதித்தவர்கள் இன்று உயரிய இடங்களில் இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பெற முயற்சி செய்வதுடன் தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரத்தை மின்வாரியத்திற்கே கொடுக்க முடியும்''என்றார்.
விழாவில் பல்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் குருகுலம் சிவநேசன் நன்றி கூறினார்.