திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று (14.10.2021) காலை 8 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்துசேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவிட்டு வெளியே அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியுடன் வாலிபர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் சிங்கப்பூரில் தரகர் ஒருவர் கொடுத்தனுப்பிய தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே நிற்பவரிடம் கொடுத்தால் அந்த நபர் 10,000 தருவார் என கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த நபரும் தங்கத்தைக் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வெளியே நின்ற வாலிபர் பத்தாயிரம் ரூபாய்க்கு 5,000 மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரண்டு பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் விசாரித்துவிட்டு மீண்டும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தங்கம் கடத்திவந்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்கிடையே, சுங்கத் துறையினர் சோதனையை மீறி கடத்தல் தங்கம் வெளியே சென்றது எப்படி? ஒருவேளை இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருந்தால் கடத்தல் தங்கம் விவகாரம் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே விமான நிலையத்தில் தங்கம் கடத்திவரும் நபர்களிடம் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும் சோதனையையும் மீறி கடத்தல் தங்கம் வெளியே சென்றது எப்படி என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.