அது என்னமோ ஸ்மார்ட் சிட்டிங்கறாங்க... ஸ்மார்ட்னா என்ன நீட்டா அழகா இருக்கனுங்கிறது தானே? இங்க எந்த தெருவும் எதுவும் ஸ்மார்ட்டா இல்லை என புலம்பிய படியே ஊர்வலத்தில் நடந்தார்கள் மாணவிகள்.
அப்படியென்ன ஊர்வலம்? செய்தி இதுதான்.,
ஈரோட்டில் நடந்து வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து மாநகர பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமை தாங்க, ஈரோடு கலெக்டர் கதிரவன் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் சிலரும் ஒரு கல்லூரியிலிருந்து கூட்டி வரப்பட்ட 200 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
ஈரோடு மாநகராட்சியில் சென்ற 2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகராட்சியில் ஈரோடு மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டது. திட்டங்களை அதிவிரைவாக செயல்படுத்தியதற்காக சிறந்த மாநகராட்சியாக தேசிய அளவில் ஈரோடு மாநகராட்சிக்கு விருது கிடைத்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிலைகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும், அதில் அவர்கள் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் ஆப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதை பொதுமக்கள் தங்களை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்யும் வகையில் வைத்துள்ளோம். அதில் 24 கேள்விகள் கேட்கப்படுகிறது. பொதுமக்கள் அதற்கு உரிய கருத்துக்களை பதிலாக அளித்து வருகிறார்கள் இதுவரை 38 ஆயிரம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தியதோடு இது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தியுள்ளோம்" என்றார்.
"சார் பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகளை இன்னும் மூடவிலை, புதை வட மின்சாரத்திற்கும், குடிநீர் திட்டத்திற்கும் மண்ணை தோண்டி போட்டுட்டாங்க எல்லா தெருவிலேயும் குண்டும் குழியான இந்த மரண குழிகளில் விழுந்து எழுந்து எலும்பு உடைந்து போக வேண்டியிருக்குது. மண்புழுதியிலிருந்து தப்பிக்க கொரானா வைரஸ்க்கு போடப்படும் முக கவசம் போல் பலபேர் மாஸ்க் கட்டிக் கொண்டு தான் போறாங்க இந்த கொடுமைல இது ஸ்மாட் சிட்டியாமா? அதை வேற மக்களிடம் கொண்டு செல்ல பேரணியாம் இந்தப் பொழப்புல ஈரோடு எனது நகரம் எனது பெருமைனு டி சர்ட் கொடுத்துட்டாங்க.
ஒன்னு எங்களுக்கு மிச்சம் இந்த டி சர்ட்டும், தொப்பியும்தான் என வெளிப்படையாகவே கிண்டல் செய்தனர் மாணவ, மாணவியர்கள்.