ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுல்லிப்பாளையம் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் 49வயது திருமலை மூர்த்தி. இவர், பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமலை மூர்த்தி, மாணவிகளிடம் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், தனது அருகே மாணவிகளை அழைத்துத் தொட்டுப் பேசுவதும், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை சினிமா பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியும் வந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் மாணவிகளை அளவு எடுப்பதாகக் கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவிகள் உடல் மேல் கை வைத்துள்ளார். சில மாணவிகள், ‘சார் இதுவெல்லாம் தப்புங்க சார்’ என்று வெளிப்படையாகவே கூற "ஏண்டா கண்னு நான் உங்க அப்பா போல" என தனது பாலியல் சீண்டலுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஓரிரு மாணவிகள் தலைமையாசிரியர் கணேசனிடம் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி சார் நடவடிக்கை தவறாக இருக்கிறது என்று வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளனர். ஆனால், தலைமையாசிரியர் கணேசன் இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாது நான் பார்த்துக் கொள்கிறேன் என மாணவிகளிடம் சமாதானம் பேசியிருக்கிறார்.
பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த மாணவிகள் நம்பிக்கைக்குரிய சக மாணவர்களிடம் ஆசிரியரின் எல்லை மீறலை விபரமாகக் கூறியதோடு கடிதமாகவும் எழுதி வெளியிட்டனர்.
கோவை மாணவி தற்கொலை சம்பவம் போல பெருந்துறையிலும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் தவறாக நடக்கும் உயிரியல் ஆசிரியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தலைமையாசிரியரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு தலைமையாசிரியர், “நான் விசாரித்து விட்டேன் மாணவிகள் கூறுவது பொய் புகார் நீங்கள் இதைப் பெரிதுபடுத்தினால் உங்களைப் பள்ளியை விட்டே நீக்கி விடுவேன்” என மாணவர்களை எச்சரித்து ஆசிரியர் திருமலை மூர்த்திக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத மாணவர்கள் சைல்டு லைன் பிரிவு, கல்வித்துறை உயரதிகாரிகள், மாவட்ட காவல் துறை எஸ்.பி. சசிமோகன் ஆகியோருக்கு புகார் அனுப்பியதோடு மாணவ, மாணவியர் பெற்றோர்களுக்கும் இந்த அநியாய செயலை கொண்டு சென்றார்கள்.
அந்த கிராமமே பதட்டமானது, சாலை மறியல், பள்ளி முற்றுகை என போராட்டக்களமாக மாறியது. நேரடி விசாரணைக்கு வந்தார்கள் கல்வித்துறை, காவல் துறை, அரசு துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளிடம் பாலியல் சீண்டல், தொடுதல், அத்துமீறல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் திருமலை மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் உடனே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட திருமலை மூர்த்தி மீது துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கணேசனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.