ஈரோடு மாவட்டத்தில் தொடக்கத்தில் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த கரோனா வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது கட்டமாக வேகமாகப் பரவி வருகிகிறது. ஒவ்வொரு நாளும் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு வைரஸ் தொற்றாலர்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு மட்டும் 500 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தனி சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு அதில் 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வைரஸ் தொற் றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கூடி வருவதால் சிகிச்சை தருவதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவை சம்பந்தமாக ஈரோடு மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குனர் திருமதி டாக்டர் சவுண்டம்மாள் கூறுகையில், "மாவட்டத்தில் இப்போது வைரஸ் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது ஏற்கனவே பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றின் தன்மைக்கு ஏற்ப மூன்று நிலையாக பிரித்து மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கிறோம். இந்த நிலையிலும் பெருந்துறை மருத்துவமனையில் 100 படுக்கைகள் காலியாகத் தான் உள்ளது. அதேபோல பெருந்துறையில் உள்ள திருமண மண்டபங்களில் 200 படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
இப்போது அதில் 65 படுக்கைகளில் தொற்று உள்ளவர்கள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயிரம் பேர் வரையிலும் தங்க வைக்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும் மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தால் பாதிப்புக்குள்ளானவர்களை உடனடியாக அங்கு தங்க வைத்து சிகிச்சை தரப்படும். இந்தத் தொற்று ஒருவருக்கு உறுதியானதால் உடனுக்குடன் பரிசோதனை செய்ய வேண்டி 50 மொபைல் டீம் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்து வருகிறோம். அதிலும் குறிப்பிட்ட நபர்களை உடனே தனிமைப்படுத்தி விட்டு அடுத்து தொற்று ஏற்பட்டவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கிறோம்.
மாவட்டத்தில் தினசரி 2,000 பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம். அதே போல் பத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் கரோனா பரிசோதனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் விரைவில் கரோனா தொற்று இல்லாத நிலைக்குச் செல்ல தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்" என்றார்.