
இலங்கையில் முக்கியப் பொருட்களான விரளி மஞ்சள், பீடி இலை, மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்ததுள்ளது.
அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல் வியாபாரிகள், தூத்துக்குடி கடல் மார்க்கமாக 120 நாட்டிகல் மைல் தொலைவிலிருக்கும் இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்திவருகிறார்கள். காரணம், இந்திய கரன்சியில் அங்கே அவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுதான். அதனால்தான் விரளி மஞ்சள், பீடி இலை மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அதே சமயம் இதே ரூட்டில் போதைப் பொருட்களும் கடத்தப்படுவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனை அறிந்த இந்தியக் கடலோரக் காவல் படை, தமிழக தூத்துக்குடி க்யூ பிரிவு மற்றும் தூத்துக்குடி மரைன் போலீசார் கடத்தல்காரர்களைக் கடத்தப்படும் பொருட்களோடு பலமுறை மடக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கடத்தல் தொழில் அதிகமாக நடப்பதால் மேற்கண்ட பாதுகாப்புப் படைகள் தங்களுடைய கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரகுமாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா தலைமையில் எஸ்.ஐ.களான ஜீவ மணி தர்மராஜ், வில்லியம் பென்ஜமின், செல்வகுமார் உள்ளிட்ட போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் தூத்துக்குடியின் திரேஸ்புரம் காலனியிலுள்ள முத்தரையர் பகுதியில் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை சுற்றி வளைத்திருக்கிறார்கள். அவரை க்யூ பிரிவு போலீசார் விசாரித்தபோது அவர் இங்கிலாந்திலுள்ள லிட்டில் ஹாம்ப்டன் ஏரியாவைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரிடமிருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்கள் இரண்டு, ஐஃபோன்கள், ரூபாய் இரண்டு லட்சம், இலங்கை பணம் இரண்டாயிரம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் பணம் திர்ஹம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் இந்தியாவில் வசிப்பதற்கான ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா என்ற ஐ.ஓ.சி. கார்டை பெற கோவாவில் மணிப்பூரைச் சேர்ந்த யாங் கரேலா வாஷூம் என்ற பழங்குடிப் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். கோவாவில் அவரோடு குடும்பம் நடத்தி, பிள்ளைகளும் உள்ளனவாம். கடந்த 2018ஆம் ஆண்டு ஜூனில் மும்பை, பரோடா, கோவா ஆகிய இடங்களில் 302 கிலோ மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதில் இந்தியாவைச் சேர்ந்த பனிரெண்டு பேர் இங்கிலாந்தைச் சேர்ந்த, தற்போது சிக்கிய ஜோனாதன் தோர்ன், ஜான் பிரேஸ்கன், வியட்நாமைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குத் தூத்துக்குடியிலிருந்து இலங்கை வழியாக போதைப் பொருள்களைக் கடத்தி சர்வதேச ஏஜெண்ட்களுக்கு கைமாற்றுவதில் இவர் கில்லாடி என்கிறார் க்யூ பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் விஜய அனிதா.
வழக்கம்போல் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவாவிலிருந்து பெங்களூரு வந்த ஜோனாதன் தோர்ன், அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது சமயம்தான் இவர் க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். மேலும், இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய, இங்கிலாந்து பாஸ்போர்ட்கள் 2020ஆம் ஆண்டு புதிப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அது போலி என தெரியவந்திருக்கிறது. காரணம் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அனைத்து பாஸ்போர்ட்களும் இயங்கவில்லை என்பதுதான் போலியை உறுதிப்படுத்தியது.
போதைக் கடத்தலில் முக்கியப் புள்ளியான ஜோனாதன் தோர்ன் இலங்கை செல்ல படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருப்பதையும், மேலும் தூத்துக்குடியில் அவருக்குக் கடத்தல் தொழிலில் உதவியவர்கள் வேறு யாரும் இருக்கலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அது பற்றியும் நாங்கள் விசாரித்துவருகிறோம் என்கிறார்கள் க்யூ பிரிவு போலீசார். கைது செய்யப்பட்ட ஜேனாதன் தோர்ன் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் ராஜ குமரேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் வெளிநாடு தொடர்புடைய குற்றவாளிகளின் விசாரணை நடக்கும் என்பதால் நீதிபதி அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி க்யூ பிரிவு போலீசார் அவரை சென்னை புழல் சியைில் அடைத்துள்னர்.
மேலும், பிடிபட்ட ஜோனாதன் தோர்ன் மீது பல வழக்குகள் உள்ளன. இங்கிலாந்தில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் இந்தியாவிலிருப்பதாகத் தெரிந்து, அவரை பிடிப்பதற்காக கோவாவரை வந்திருக்கிறார்கள் இங்கிலாந்து போலீசார். இதனையறிந்த ஜோனாதன் தோர்ன் தப்பிக்கும் பொருட்டு இலங்கை செல்வதற்காகத் தூத்துக்குடி வந்தபோதுதான் க்யூ பிரிவு போலீசாரின் வலையில் சிக்கியுள்ளார்.
இங்கிலாந்து போலீசாரால் கோட்டைவிடப்பட்ட, வெளிநாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் தூத்துக்குடியில் வளைக்கப்பட்டது பரபரப்புப் பேச்சாகியிருக்கிறது.