Skip to main content

பொறியியல் படிப்புக்கும் நீட் என்றால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயல்! ராமதாஸ்

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
Engineering Study


பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தினால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

நாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருக்கிறார். பொறியியல் படிப்புக்கான நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளை கட்டாயப்படுத்தப்போவதில்லை என தொழில்நுட்பக் கல்விக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்போது நீட் தேர்வை மீண்டும் வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
 

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலை தெரிவித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.
 

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனையை மத்திய அரசு சுமார் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2009&ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக கபில் சிபல் பதவியேற்ற நாளில் இருந்தே இந்த யோசனையை வலியுறுத்தி வந்தார். சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இடையில் நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை   நிரந்தரமாக்கி விட்ட மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வைத் திணிக்கத் துடிக்கிறது.
 

பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், அது மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். இது மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில்  சேரும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. ஊரக, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
 

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். உதாரணமாக, நடப்பு ஆண்டு ஐ.ஐ.டிக்களிலுள்ள 12,000 இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை வழக்கம் போல ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கு புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதிலும், புதிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் திணறும் நிலையில், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால், முன்னணி பொறியியல் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இடம் கிடைக்காது.
 

இத்தகைய சூழலில் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு என்ற மத்திய அரசின் தாக்குதலை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இத்தாக்குதலை முறியடித்து, ஊரக, ஏழை மாணவர்களின் பொறியியல் கல்வி கனவைக் காப்பார்களா? என்பதே ஐயம் தான். அதற்கான அறிகுறிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தென்படுகின்றன.
 

சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நீட் தேர்வு பற்றி கேட்ட போது,‘‘ நாம் முடிந்த அளவுக்கு நீட் தேர்வை எதிர்க்கிறோம். மத்திய அரசுடன் கடுமையாக வாதிடுகிறோம். கடைசியில் வேறு வழியின்றி நடத்தத் தான் வேண்டியிருக்கிறது’’ என்று கூறி தமது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனோ, ‘‘மருத்துவப் படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டதைப் போலவே பொறியியல் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழகத்துக்கு வேறு வழியில்லை’’ என்று கூறி தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டார். இத்தகைய சூழலில்  தமிழநாட்டு மாணவர்களை பொறியியல் நீட் தேர்விலிருந்து காப்பாற்றுவது கேள்விக்குறியாகியுள்ளது.
 

பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

general couselling for engineering course starts today
கோப்புப்படம்

 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில்  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

அந்த வகையில், கடந்த 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Tamil Nadu Engineering Consultation Starts Today
மாதிரி படம்

 

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில்  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

 

அந்த வகையில், இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக  கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.