![Enforcement inquiry into former minister C. Vijayabaskar!](http://image.nakkheeran.in/cdn/farfuture/n-3igJdg5RMa6S008cYMXDr56ePm8HjYdORkSJtRCrg/1638167819/sites/default/files/inline-images/cvijayabaskar.jpg)
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்ற பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி. விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தன்னிடம் ரூபாய் 14 கோடி மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர், ரூபாய் 3 கோடியை மட்டும் தன்னிடம் திருப்பியளித்தார். மீதி தொகையை அவர் திருப்பித்தரவில்லை. மீதி தொகையைக் கேட்டதால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சி. விஜயபாஸ்கர் இன்று (29/11/2021) காலை 10.00 மணிக்கு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தரப்பு கூறுகையில், "விசாரணையின்போது உண்மையைச் சொல்வோம்" எனத் தெரிவித்துள்ளது.