Skip to main content

தேர்தல் நாளில் காவல்துறையினருக்கு ‘அவசர’ உத்தரவு! - வி.எச்.எஃப். செட் ஒப்படைப்பில் வில்லங்கமா?

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

hjk

 

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் இத்தனை அவசரகதியிலா காவல்துறையினர் செயல்படவேண்டும்? வேறுவழியின்றி, , நாளை (6-ஆம் தேதி)  வாக்குப்பதிவு முடிந்ததும், காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டது போல், தங்களுக்கு இட்ட கட்டளையை அரக்கப்பரக்க நிறைவேற்றப் போகின்றனர். 


இதென்ன விவகாரம்? வாக்குப்பதிவு நாளில், வி.எச்.எப். (very high frequency) தொலைத்தொடர்பு உபகரணங்களான வாக்கி-டாக்கி, வாகனங்களின் பொருத்தப்பட்டுள்ள மைக் போன்றவற்றை, பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆந்திரா – ஒருங்கிணைந்த போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்டு, தமிழகத்தில் பல அலகுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையம், மண்டல் மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை, ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்துவதாக அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில டி.ஜி.பி., தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை அதே நல்ல நிலையிலேயே, காலதாமதம் செய்யாமல், உடனே சென்னை PTB சர்வீஸ் பிரிவுக்கு அனுப்பவேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு ‘ரேடியோ மெசேஜ்‘ வாயிலாக தகவல் அனுப்பினார். 


தமிழக காவல்துறை ஏடிஜிபியும், அத்தகவலை அப்படியே ஏற்று, விரைந்து செயல்பட வேண்டுமென, தென்மண்டல காவல்துறை அதிகாரிகள் வரைக்கும் ‘ரேடியோ மெசேஜ்’ அனுப்பினார். மத்திய மற்றும் தெற்கு மண்டல ஏடிஎஸ்பி (Tech) ரமேஷ், காவல்துறையினருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பிய வாய்ஸ்-மெசேஜில் – “அசெம்பிளி எலக்ஷனுக்காக நாம வாங்கிய சர்வீஸ் செட் எல்லாத்தயும் ஆந்திரா – தெலங்கானாவுக்கு திருப்பிக் கொடுக்கணும். இந்த செட்டை எல்லாம் பக்கத்துலயே கொடுத்து வச்சிக்கங்க. ரொம்ப லாங் டிஸ்டன்ஸ்ல கொடுக்க வேணாம். அப்புறம் கழற்ற முடியாது. போலிங் 7 மணிக்கு முடிஞ்சிருச்சுன்னா.. 8 மணிக்கு கழற்ற ஆரம்பிச்சிருங்க. எஸ்.பி.கிட்ட எமர்ஜெனிஸின்னு காமிச்சிட்டு, நைட்டோட நைட்டா ஆள போட்டு மதுரைக்கு கொண்டு வந்திருங்க. நாங்க வண்டிய வச்சிக்கிட்டு ரெடியா உட்கார்ந்து இருப்போம். எனக்கு ஏழாம் தேதி காலைல 6 மணிக்கு போகணும்னு சொல்லிருக்காங்க. அது உங்க கையிலதான் இருக்கு. நானும் இங்க வண்டி வாங்கி ஆள் போட்டு அனுப்பி விடணும். இத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கங்க. அதிகபட்ச அட்டென்ஷன் கொடுங்க. இல்லைன்னா.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பார்த்து நடந்துக்கங்க.” என்று பேசியிருக்கிறார். 


 

hjk

 

இந்த  ‘அவசரம்’ குறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் “எல்லாமே சம்பிரதாயமா நடந்துக்கிட்டிருக்கு. 7 மணிக்கு போலிங் முடிஞ்சதும் 8 மணிக்கு வி.எச்.எப். செட்டை அனுப்பனும்னு சொல்லுறாங்க. மாவட்ட / நகர தலைமையகத்துக்கு பக்கத்திலேயே செட்டை பயன்படுத்தணும். நீண்ட தூர ரோந்து மற்றும் மொபைல் பார்ட்டி வாகனங்களுக்கு கொடுக்க வேணாம்னு ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டிருக்காங்க. ஒரு ஊருல இருக்கிற வாக்குச்சாவடிக்கும், இன்னொரு ஊருல இருக்கிற கவுண்டிங் சென்டருக்கும் இடைப்பட்ட தூரம் நெறய இருக்கும். காவல்துறை டிஜிபி சொல்லுறத அப்படியே கடைப்பிடித்தால், கவுண்டிங் சென்டர் வரைக்கும் வி.எச்.எப். சாதனங்களைக் கொண்டுசெல்ல முடியாது. வாக்குப்பதிவு நடந்த இடத்திலேயே செட்டை அகற்றனும்கிற மாதிரி இருக்கு இந்த உத்தரவு. நடக்கக்கூடாத ஏதாச்சும் ஒண்ணு நடந்தாக்கூட, வெளிப்படையா வி.எச்.எப். மூலம் தகவல் பறிமாறிக்கொள்ள முடியாது. கொடுத்தது கொடுத்தபடியே நல்ல நிலையில் வி.எச்.எப். செட் இருக்கணும்னு கண்டிஷன் வேற. அப்படின்னா.. செட்ட யூஸ் பண்ணாம அப்படியே திருப்பிக் கொடுத்திருங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு. சும்மாவே, இவிஎம் மெஷின் குறித்து மக்களுக்கு சந்தேகம் இருக்கு. இந்த மாதிரி நடக்கும்போது, போலீஸை வச்சே ஓட்டு மெஷினை மாற்ற திட்டம் எதுவும் இருக்கோன்னு, மக்கள் பேசுறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திட்டாங்க.” என்றார் வேதனையுடன்.

 

திட்டமிடல் இல்லாமல் இத்தனை பலவீனமாகவா இருக்கிறது தேர்தல் ஆணையம்? 

 

 

 

சார்ந்த செய்திகள்