திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லிப்ட் கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் திருமணத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமண விழா நடைபெற்றது. அப்பொழுது மண்டபத்தின் கீழ் தளத்திலிருந்து முதல்தளத்திற்கு உணவை பெரிய லிப்டில் எடுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக லிப்ட் கம்பி அறுந்து விழுந்தது. இதில் உணவு பரிமாற சென்ற 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு சீஸல் மாணவன் தலை நசுங்கி உயிரிழந்தான். உணவு பரிமாறும் வேலைக்கு வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்ட் கம்பி அறுந்து விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவன் சீஸலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
350 கிலோ எடையை தூக்கும் திறன் கொண்ட அந்த லிப்டில் அதிக எடைகொண்ட உணவு பொருள் மற்றும் மூன்று பேரின் எடை என அதிக எடை ஏற்றப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவன் சீஸலின் அண்ணன் தனுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஜெயப்ரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் என 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.