Skip to main content

முதியவரை மிதித்த யானை.... கால்கள் முறிவு!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Elephant stepping on an old man .... legs broken

 

கோவை மாங்கரை அருகே உள்ள பெரிய தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்.  75 வயதான இவர் தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மாந்தோப்பில் நேற்று இரவு ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது . அதனை பார்த்த  அவர் சத்தம் போட்டவாறு யானையை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து லட்சுமணன் யானை சென்றதை அடுத்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

 

அப்போது திரும்பிச் சென்ற யானை திடீரென லட்சுமணனை துரத்தி வந்து தும்பிக்கையால் தட்டிவிட்டு காலில் மிதித்துள்ளது. இதில் அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு  சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அந்த யானை அங்கிருந்து சென்றது. இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் லட்சுமணன் வீட்டிற்கு வெளியே படுத்திருப்பதைப் பார்த்து அங்கு சென்றுள்ளனர். அப்போது யானை தாக்கியதில் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்த லட்சுமணன் குறித்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அவருக்கு கால் முறிவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “தடாகம், மாங்கரை ,பெரிய தடாகம் பகுதிகளில் தற்போது யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே இரவில் அவசியமின்றி  யாரும் வெளியே வரவேண்டாம் யானைகள்  ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது” என வலியுறுத்தியுள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்