உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் ஆகியவை அம்மாநிலத்திற்குச் செல்லவிருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணி கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (25.10.2021), திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பலத்த பாதுகாப்புடன் உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் எடுத்துச் செல்கின்றனர். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆரையா மாவட்டத்திற்கு 1,090 விவிபேட் இயந்திரங்களும், 300 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்களும் கொண்டு செல்லப்படுகின்றன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையை வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் அதிகாரிகள் திறந்தனர். மேலும், அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது.