தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இந்த தேர்தல் முன்னரே நடக்க வேண்டியது. ஆனால் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் தோல்வி பயத்தில் திமுக வழக்கைத் தொடுத்துத் தேர்தலை நிறுத்தியது. சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டதோடு இதுவும் போதாதென்று மேலும் 20 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். மொத்தமாக 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். எவ்வளவு செஞ்சிருக்கீங்க. நான்கு மாதம் முடிந்து ஐந்தாவது மாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டோ... மூன்றோ... அறிவிப்புகளைச் சம்பிரதாயத்திற்கு அறிவித்துவிட்டு விட்டுட்டாங்க. ஆனால் அறிவிக்கப்பட்ட எந்த அறிவிப்புமே நிறைவேற்றப்படவில்லை.''என்றார்.
எதிர்க்கட்சி தலைவரின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாகப் பதிலளித்திருந்தார். அதேபோல் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, ''எடப்பாடி பழனிசாமி அவதூறுகள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவரே அவரை தாழ்த்திக் கொண்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதை அவராகப் பார்த்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ''விரும்பும்போதெல்லாம் தேர்தலை நடத்த முடியாது. வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகளை முடித்தால் தான் தேர்தலை நடத்தமுடியும். உள்ளாட்சி என்பது ஒரு மரத்தின் வேர் போன்றது. அந்த வேர்களைச் சிதைத்தது அதிமுகதான். தோல்வி பயத்தினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது''என்றார்.