Skip to main content

தேர்தல் பறக்கும் படையினர் 5 லட்சம் பணம் பறிமுதல்! 

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Election flying squad seizes Rs 5 lakh cash

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம், திட்டக்குடி மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன், மங்கலம்பேட்டை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் அலுவலர்கள் கொண்ட பறக்கும் படையினர் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் இறையூர் சிவன் கோவில் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி பகல் 11 மணியளவில் விருத்தாசலத்திலிருந்து ராமநத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு நபர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(32), சிவா(29) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி, விருத்தாசலத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தொழுதூரில் உள்ள ஒரு ஸ்டீல் கடையில் உள்ள இசக்கி முத்து என்பவரிடம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து சென்றதாக கூறியுள்ளனர். அவர்களிடமிருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

 

அதேபோன்று நேற்று அதே பகுதியில் மேற்படி அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அவர், ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் பாக்ரா பகுதியைச் சேர்ந்த பாருசிங் மகன் காலுசிங் (19) என்பதும் தெரியவந்தது. இவர். விருத்தாசலத்தில் ஒருவாடகை வீட்டில் இருந்துகொண்டு திட்டக்குடியில் உள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருவதாகவும் விருத்தாசலத்தில் உள்ள மற்றொரு ஸ்டோர் உரிமையாளர் நர்பட் என்பவரிடம் இருந்து, தான் வேலை செய்யும் பேன்சி ஸ்டோர் முதலாளிக்கு கொடுப்பதற்காக பணம் கடனாக வாங்கி செல்வதாகவும் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். மேற்படி மூவரும், உரிய ஆவணங்களை கொண்டுவந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து அந்தப் பணத்தை திருப்பி அளிப்பது குறித்து அதிகாரிகளின் முடிவே இறுதியானது என்கிறார்கள் பறக்கும் படையினர்.

 

 

சார்ந்த செய்திகள்