கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகதேவன்பாளையம், சிறுவலூர் ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் சிறுவலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் கன்று வளர்ப்பு கடனாக 46 விவசாயிகளுக்கு சிறுவணிகக் கடன், சுய உதவிக்குழு கடன் என 54 பேருக்கு மொத்தம் ரூ.44 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்திய பிரதமரின் பாராட்டைப் பெறும் அளவிற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அத்திக்கடவு & அவினாசி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் 10, 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்ற உத்தரவு, மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்குதான். அக்டோபர் 1ஆம் தேதி பள்ளித் திறப்பு என்பதை பள்ளிக் கல்வித்துறை மட்டும் முடிவு செய்து அறிவித்துவிட முடியாது. கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை ஆகியவை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்திய பின்னர், அதற்கான முடிவை முதலமைச்சர்தான் அறிவிப்பார்.
பாடங்களைக் குறைப்பது குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், மேலும் பாடங்களைக் குறைக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்வார். குஜராத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த மாதம் இறுதிவரை நடைபெறும்.
கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு எடுப்பார். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில், அடுத்த மாதம் முதல் '14474' என்ற தொலைபேசி எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். "எல்லாமே முதலமைச்சர் முடிவு செய்தால் அப்ப இவர் எதுக்கு அமைச்சர்..?" என ரத்தத்தின் ரத்தங்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.