திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம். கடந்த மாதம் புரட்டாசி என்பதால் சந்தையில் ஆடுகள் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை. புரட்டாசி மாதம் முடிந்த பிறகு கடந்த வாரம் ஓரளவு ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே ஆடுகளை வாங்குவதற்காகத் திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். குறைந்தபட்சமாக 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 7 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் வாங்கி அதனை விற்பனை செய்ததால் அவர்களுக்கு லாபம் கிடைத்தது.
விவசாயிகள் பலர் இதனால் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி வியாபாரிகள் ஏராளமானோர் ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு சுமார் 2 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இச்சந்தையில் சேவல்களும் அதிக அளவு விற்பனையாகின.
தீபாவளி பண்டிகை நாட்களில் கிராமங்களில் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். இதற்காகப் பயிற்சி பெற்ற சேவல்களை இளைஞர்கள் சந்தையிலேயே போட்டியிட வைத்து வாங்கிச் சென்றனர். 3000 முதல் 30 ஆயிரம் வரை சேவல்கள் விற்பனையாயின. வியாழக்கிழமைகளில் மட்டுமே சந்தை நடைபெற்று வந்த நிலையில். தீபாவளியை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை சிறப்புச் சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடு, கோழிகளை வாங்க முடியாத வியாபாரிகள் அன்றைய தினம் வாங்கிக் கொள்ளவும் தயாராகி வருகிறார்கள்.