கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றுவருகிறது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பினாலும், அதனை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுதும் தமிழ்நாடு மாணவர்கள் அச்சத்தின் காரணமாக தங்களின் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். கடந்த 4 நாட்களில் மூன்று பேர் நீட் தேர்வு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நேற்று முன்தினம் (14.09.2021) வேலுர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் துரைமுருகன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு நீட் என்ற கொடிய அரக்கனை ஏவியுள்ளது. டெல்லியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாண்டபோது கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, மாணவர்களின் உயிரைப் பற்றியா அக்கறை கொள்ளப் போகிறது? அவர்கள் இதை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஆனால் இதற்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய நாள் வரும்" என்றார்.