சமீப காலமாக வரதட்சணை கொடுமை அதிகாித்துவரும் நிலையில், காவல் நிலையங்களிலும் தினமும் வரதட்சணை புகாா்கள் பதிவாகிவருகின்றன. இந்தநிலையில், குமாி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிாியதர்ஷினிக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கோணம் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ராஜன் ரெஜீஸ்க்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 65 பவுன் தங்க நகை, கார், 25 சென்ட் நிலம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் என வரதட்சணையாக பிாியதர்ஷினியின் பெற்றோர்கள் கொடுத்தனர். இந்நிலையில், திருமணம் முடிந்த இரண்டு மாதத்திலேயே ராஜன் ரெஜீஸின் பெற்றோர்கள் இன்னும் கூடுதல் வரதட்சணை கேட்டு பிாியதர்ஷினியை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். அந்தக் கொடுமையை சில நாட்கள் தாங்கிவந்த பிாியதர்ஷினி, கடைசியில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்ததன் அடிப்படையில், ராஜன் ரெஜீசும் பிாியதர்ஷினியும் தனியாக வீடெடுத்து வசிக்க முடிவுசெய்து, ராஜன் ரெஜீஸ் வேலை செய்துவரும் கோணம் பகுதியில் வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக வசித்துவந்தனர். இதையடுத்து, கடந்த மூன்று தினங்களுக்கு முன் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜன் ரெஜீஸ், பின்னர் வீடு திரும்பவில்லை.
பிாியதா்ஷினி, ராஜன்ரெஜீஸை செல்ஃபோனில் தொடர்புகொண்டபோது அவரது தாயார் ஃபோனை எடுத்து, “மேலும் 50 பவுன் நகை தந்தால்தான் உன் கணவா் உன்னோடு வாழ வருவார். இல்லையனில், அவருடன் வாழ முடியாது. நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு” என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிாியதர்ஷினி, நேற்று (23.07.2021) வெள்ளிக்கிழமை முளகுமுடில் கணவர் வீட்டுக்கு வந்து கணவனைப் பார்க்க வேண்டுமென்று கேட்டபோது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. கணவனும் வீட்டு பின்வாசல் வழியாக குதித்து வெளியே ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிாியதர்ஷினி, என்னோடு என் கணவரைச் சேர்த்து வையுங்கள் என கதறி அழுது நடுரோட்டில் புரண்டார். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம், எனக்கு நியாயம் வாங்கிக் கொடுங்கள் என கெஞ்சி கண்ணீர் மல்க கேட்டது அனைவரையும் உறைய வைத்தது.