தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர், சிறந்த பேச்சாளர். தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இளைஞர்களின் தன்னம்பிக்கைக்கும் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவரது நூல்கள் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த வருகிறது.
அரசு விழாக்களில் பூங்கொத்துக்களுக்குப் பதிலாக புத்தகங்கள் பரிசளிக்கலாம் என்று 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், தலைமைச்செயலர் இறையன்புவை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளும் பொன்னாடைகளும் தந்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். மேலும், பலர் இறையன்பு எழுதிய புத்தகங்களையே அவருக்கும், அமைச்சர்களுக்கும் பரிசளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புத்தகங்களைப் பரிசளிக்கலாம் என்கிற அரசாணையைச் சுட்டிக்காட்டி, “அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ வாங்கி பூங்கொத்துகளூக்குப் பதிலாக விநியோகிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவில் என்னுடைய புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பின் அந்த தொகையை சம்மந்தப்பட்ட அரசு அலுவலரிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். அதே சமயம், சொந்தப் பணத்தை செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்த செய்தி குறிப்பையும் வெளியிட்டிருக்கிறார் தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.