நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை நாம் குழந்தை போல், பார்த்துக் கொள்வதால், நம் மீது உயிரையே வைக்கின்றது. ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில் தங்களை வளர்க்கும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, உயிர்த் தியாகம் செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திரைப்படங்களில் இந்த காட்சிகளை அதிகம் கண்டிருப்போம். அதே போல ஒரு துயரமான சம்பவம் தான், தற்போது புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது குறிஞ்சிப்பட்டி கிராமம். இந்த பகுதியில் வசிக்கும் ஜெயந்த் என்பவர், அவருடைய வீட்டில் பல வருடங்களாக வெள்ளை நிற நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவர்களுடைய வளர்ப்பு நாய், ஜெயந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் வீட்டை, கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் பெய்த மழையால் ஜெயந்த் வீட்டை சுற்றி அதிகளவில், புல், செடி கொடிகள் முளைத்துள்ளது. அப்போது, அந்த அடர்ந்த புதர் பகுதிக்கு வந்த நல்ல பாம்பு ஒன்று, திடீரென ஜெயந்த் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளது. அந்த சமயத்தில், அதே பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டிருந்த வெள்ளை நாய் வீட்டை நோக்கி நல்லபாம்பு ஒன்று செல்வதை பார்த்துள்ளது. உடனடியாக அந்த நல்ல பாம்பை நாய் கடித்துக் கொன்றுள்ளது. அதன் பிறகு அதே பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜெயந்தின் வளர்ப்பு நாயும் இறந்து கிடந்துள்ளது.
இத்தனை வருடங்கள் தனக்கு உணவளித்து செல்லமாக வளர்த்த வந்த எஜமான் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரையும் துச்சமாக நினைத்து பாம்பைக் கடித்துக் கொன்ற நிலையில், பாம்பின் விஷம் தாக்கி தன் உயிரையும் இழந்துள்ளது. இதைப் பார்த்து, கண் கலங்கிய ஜெயந்த் குடும்பத்தினர், அவர்கள் வளர்த்த நாயைச் சோகத்துடன் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.