ஆயுர்வேத மருத்துவர்கள், 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 2030ஆம் ஆண்டிற்குள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறையைக் கொண்டு வர நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் ஈரோட்டில் மருத்துவர்கள் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை (01 பிப்.) தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா தலைமையில் நடைபெறுகிறது. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர்கள் சுகுமார், ராஜசேகர், செந்தில்வேல், வீரசிவம், தங்கவேலு உட்பட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சுதாகர், "மத்திய அரசின் இந்த அறிவிப்பு மற்றும் அது சார்ந்த திட்டங்கள் மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடும் விளையாடுவது போன்றது. எனவே, இத்திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார். இதனிடையே ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
ஈரோட்டை போலவே நாடு முழுக்க 600 இடங்களில் மருத்துவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 14ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்க இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியவை இதுவரை எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.