தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் லட்சுமிபுரம் என்.ஆர்.டி. தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், அதே பகுதியில் ஒரு எலக்ட்ரோ ஹோமியோ கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்துவந்துள்ளார். இவரது மனைவி சாந்தி என்பவரும் ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவந்துள்ளார்.
இந்த நிலையில், தேனி மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டிற்குச் சென்று, ‘அனுமதி பெறாமல் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறீர்கள். இதை மறைக்க வேண்டும் என்றால் எனக்கு 50,000 ரூபாய் தர வேண்டும்’ என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி தொல்லை கொடுத்ததால் 40,000 ரூபாயை சீனிவாசன் இணை இயக்குநரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
அதேபோல், நான்கு நாட்களுக்கு முன்பு இணை இயக்குநர் அலுவலர் அனுப்பியதாக மூன்று பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் சீனிவாசன், இன்று (20.11.2021) அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியகுளம் தென்கரை போலீசார், சீனிவாசன் உடலைக் கைப்பற்றி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுசம்பந்தமாக லட்சுமிபுரம் பகுதி மக்கள் கூறுகையில், “மருத்துவர் சீனிவாசன் மிகுந்த கருணையோடும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் மனப்பான்மையில் மருத்துவம் பார்த்துவந்தார். அவரின் இழப்பு எங்களால் தாங்க முடியவில்லை. அவரின் இறப்பிற்குக் காரணமான நபர்கள் மீது தமிழக அரசும், சுகாதாரத்துறையும் உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.