மருத்துவர் முத்துலட்சுமியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிரகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாள்! பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
1886ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி, அன்றைய காலகட்டங்களில் நிலவிய பெண் கல்வி எதிர்ப்பை மீறி கல்வி கற்றார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சையியல் துறையில் இணைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார் முத்துலட்சுமி. 1912ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவான முத்துலட்சுமி, அதே ஆண்டில் சென்னை மகப்பேறு மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக இணைந்தார். மேலும், 1925ஆம் ஆண்டு சட்ட மேலவை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்ற பாடுபட்டார். 1954இல் சென்னை அடையாறில் தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய பெருமையும் இவரையே சாரும். இவரது சேவைக்காக 1956இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி மருத்துவர் முத்துலட்சுமியை கௌரவித்தது.