தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு ஆகியவை தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் 317.08 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் ஜனவரி 12ல் 155.06 கோடி ரூபாய்க்கும், ஜனவரி 13ல் 203.05 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையான நிலையில் நேற்று ஒரு நாளில் 317.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாய்க்கும் என மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் 59.28 கோடி, திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி, சேலம் மண்டலத்தில் 63. 87 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் அதற்கு முந்தின நாளான சனிக்கிழமை மதுவிற்பனை அதிகரித்திருந்தது. அன்று மட்டும் தமிழகத்தில் 217.96 கோடி ரூபாய் மது விற்பனை நடந்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை மற்றும் நாளை முழு முடக்கம் என்பதால் மதுவிற்பனை 317.08 கோடி என அதிகரித்துள்ளது. கரோனா பரவல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.