Skip to main content

வேண்டாம் மின் கட்டண விலை உயர்வு - திமுக தோழமை கட்சி வலியுறுத்தல்!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

gjh


தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூபாய் 12,647 கோடியாக கடன் உயர்ந்துள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக மின் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 

 


அதன்படி, வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றம் இல்லை. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 27.50 கூடுதலாகக் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 301- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 147.50 உயர்த்தப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 298.50 கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 


இந்நிலையில் இந்த கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது தேமுதிக மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கிடையே திமுக தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Next Story

'இது அப்பட்டமான ஏமாற்று வேலை' - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 'This is a blatant fraud'- Anbumani Ramadoss condemned

'அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம்  3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்?' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு  8.15ரூபாயிலிருந்து   ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப் பயன்பாட்டிற்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப் பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று 31.10.2023 ஆம் தேதியிட்ட  ஆணை எண்: 9இன் மூலம்  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர்-டிசம்பர் சுழற்சியில்  குறைக்கப்பட்ட மின்கட்டணம் நடைமுறைப்படுத்தபட்டிருக்க வேண்டும். ஆனால், மின்கட்டணம் குறைக்கப்படாததற்கான காரணம் குறித்து கேட்ட போது, மின்கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி வீடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மின்வாரியம் கூறி வருகிறது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை.

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மாடிகளின்  எண்ணிக்கை, குடியிருப்புகளின் எண்ணிக்கை, மின் தூக்கி உள்ளதா, இல்லையா? என்பன உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆவணத் தொகுப்புகளில் உள்ளன. அவற்றின் உதவியுடன் ஒரு வாரத்தில்  கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி குடியிருப்புகளை கண்டறிந்து கட்டணக் குறைப்பை  நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். வீடு வீடாக கணக்கெடுத்திருந்தால் கூட, 15 நாட்களில் இந்த பணியை முடித்திருக்க முடியும். ஆனால்,  3 மாதங்களாகியும்  இன்று வரை கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  விளக்கமளிக்க வேண்டும்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பு மிக மிகக் குறைவானது தான். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால்,  பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப்பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 13 மடங்கு அளவுக்கு அதிகரித்தது.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வுக்கு முன்பாக பொதுப்பயன்பாட்டுக்காக 150 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்கான கட்டணமாக ரூ.112.50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு  ரூ.1427 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 13 மடங்கு அதிக உயர்வு ஆகும். இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1029  கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம் ஆகும். பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 13 மடங்கு உயர்த்தி விட்டு,  அதில் மிகக்குறைந்த அளவை மட்டும்  குறைப்பதாக  அறிவித்த  தமிழக அரசு, அதையும் நடைமுறைப்படுத்தாதது ஏன்?

தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட  மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில்  இருந்து  தமிழ்நாட்டு மக்களால் இன்னும் மீள முடியவில்லை. எனவே,  அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த  அளவுக்கு  குறைக்க வேண்டும்; முன்பு வழங்கப்பட்டதைப் போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அத்துடன் குறைக்கப்படாத மின்கட்டணத்தை செலுத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, அவை கூடுதலாக செலுத்திய மின்சாரக் கட்டணத்தை திருப்பி வழங்கவும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.