நாளுக்கு நாள் தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது...? என்பது குறித்தான 32 கேள்விகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளும் அ.தி.மு.க.எடப்பாடி பழனிசாமி அரசிடம் கேட்டிருந்தார். அதுபோலவே தமிழகம் முழுவதும் தி.மு.க.வை சேர்ந்த அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து அவர்களின் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்த 32 கேள்விகள் அடங்கிய தொகுப்பினை கலெக்டர்களிடம் கொடுத்து அதற்கு பதில் வாங்க வேண்டும் என்று மா.செ.க்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என 32 கேள்விகளுக்கு பதிலளிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்து அந்த மனுவை கொடுத்தார். ஈரோடு கலெக்டர் "இன்னும் மூன்று நாளில் உங்களுக்கு பதில் கொடுக்கப்படும்" என அவரிடம் தெரிவித்தார்.
தி.மு.க. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் கேட்கும் இந்த 32 கேள்விகள் அரசு இயந்திரத்தை தொடர்ந்து சளைக்காமல் இயங்க வைக்கத்தான் என வருவாய் துறை அதிகாரி ஒருவரே நம்பிக்கையுடன் கூறினார்.
அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகள்...
மாவட்டத்தில் தற்போது கரோனா பெருந்தொற்றைப் பரிசோதிக்கும் மையம் எவ்வளவு?
பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள்?
நோய்த் தொற்று ஒரு நாளிற்கு எத்தனை நபர்களுக்குப் பரிசோதிக்கப்படுகிறது?
பரிசோதனைகள் நடைபெறும் நேரம்? பணியல் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை?
செவிலியர்களின் எண்ணிக்கை?
சுகாதாரப் பணியாளர்களின் விவரம்?
பாதிப்படைந்தவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறதா?
பி.சி.ஆர். டெஸ்ட் கருவி நமது மாவட்டத்திற்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது?
நமது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை / பரிசோதனை மையங்களுக்குத் தரப்படுகிறது, அதன் விவரம்?
நமது மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு பி.பி.இ. எவ்வளவு தரப்படுகிறது?
பி.பி.இ. நமது மாவட்டத்தில் உள்ள எத்தனை மருத்துவமனை / பரிசோதனை மையத்திற்குத் தரப்படுகிறது? அதன் விவரம்?
எத்தனை மருத்துவமனையில், எத்தனை படுக்கைகள் என்ற விவரம்?
மருத்துவமனை தவிர வேறு எந்தந்த பகுதிகளில் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன?
நமது மாவட்டத்தில் வென்டிலேட்டர் எவ்வளவு உள்ளது? அது எந்தந்த மருத்துவமனை கொடுக்கப்பட்டுள்ளது?
எத்தனை நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்?
கரோனா தொற்றால் இறந்தவர்களை நமது மாவட்டத்தில், எந்தந்த பகுதியில் புதைக்கப்படுகிறார்கள்?
இது போன்ற கேள்விகள் அதில் உள்ளன. இந்தக் கேள்விகளை மனுவாகத் தயார் செய்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பி அந்த மனுவை தி.மு.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து தந்துவருகின்றனர். இந்த மனுவுக்குத் தரும் பதிலை வைத்து அடுத்த கட்டமாக தி.மு.க. கேள்வி எழுப்ப தயாராகி வருகிறது.