சென்னை முகப்பேர் அருகே நொளம்பூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குச் சென்ற திமுகவினர், அங்கு இருந்த பெயர்ப் பலகை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை சூறையாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., "அம்மா உணவக விவகாரத்தில் நவ சுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இருவர் மீதும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம். அதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா உணவகத்தில் கிழித்து எறியப்பட்ட ஃபிளக்ஸ் பேனர், மீண்டும் அதே இடத்தில் ஒட்டப்பட்டது. தவறு செய்தவர்கள் திமுகவினராக இருந்தாலும் நடவடிக்கை என ஸ்டாலின் கூறியுள்ளார். அம்மா உணவகம் என்பது அரசு உணவகம், அதை சேதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.