Skip to main content

திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

DMK in court MP Charan!

 

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்ற கோவிந்தராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

கோவிந்தராஜின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரது மகனிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கூறியுள்ளார். சந்தேகமடைந்த கோவிந்தராஜின் மகன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், கொலை வழக்காகப் பதிவுசெய்யக் கோரி, காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

 

அதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ரமேஷ் எம்.பி. மீது கொலை வழக்குப் பதிவுசெய்யக் கோரி மனு அளித்தனர். ஆனால், கோவிந்தராஜ் மரணத்தை காடாம்புலியூர் காவல்துறையினர் சந்தேக வழக்காகப் பதிவுசெய்தனர். இதனிடையே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை, ஜிப்மர் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 27- ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. மறுநாளே விசாரணையைத் தொடங்கியது. 

 

பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர, தொழிற்சாலையில் பணியாற்றிய நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், அவர் இன்று (11/10/2021) காலை பண்ருட்டி நீதிமன்றத்தின் நீதிபதி முன் ஆஜரானார். அதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தரப்பு, நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.