குட்கா விவகாரத்தில் இரண்டாவது உரிமை மீறல் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்தது உரிமை மீறல் என இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (24/09/2020) காலை 10.30 மணிக்கு வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்தொடர்ச்சியாக, உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இடைக்காலத் உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சபாநாயகர், பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.