
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழை திட்டமிட்டு தவிர்த்திருப்பது தமிழ் மொழியின் மீதான பண்பாட்டு படையெடுப்பாகும். தொல்லியல் பட்டப்படிப்பிற்கான அறிவிக்கையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது வஞ்சக செயலாகும். பட்டப்படிப்பிற்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு மொழிகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் தொல்லியல் சான்றுகளில் 60- க்கும் மேலான சான்றுகளை கொண்டு விளங்கும் தமிழ் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு, தமிழர் நலன் புறக்கணிப்புக்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது. தமிழ் மொழி மீது பண்பாட்டு படையெடுப்பை நடத்தி, ஒருமைப்பாட்டை ஒழித்திட முனைகிறது மத்திய அரசு. பன்முகத்தன்மையை பாழ்படுத்தி ஒருமைப்பாட்டை உருக்குலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கையாக உள்ளது” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.