நேற்று (06.04.2021) வாக்குப்பதிவின்போது, செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட வந்த கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் கார் மீது அதிமுகவினர் கட்டையால் தாக்க முயன்றதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல் தாக்குதலைத் தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாகவும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றம்சாட்டியுள்ள நிலையில், போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருந்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளைப் பார்த்து வருகிறோம். செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுகவினர், அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர்கள் மற்றும் பாஜகவினர் ஆகியோர் மிரட்டல் விடுத்து, என்னை தாக்கவும் முயற்சித்தனர். இரு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
காவல்துறையினரின் லத்தியைப் பிடுங்கி தாக்கினர். ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் வந்துதான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். தொடர்ந்து, ஐ.ஜி., காவல்துறை ஆணையர் ஆகியோரிடமும் புகாரளிக்க உள்ளேன்'' என்றார்.