Skip to main content

பேக்கரி பெண்ணிடம் அத்துமீறல்... திமுகவினரை அடித்துத் துவைத்த கிராம மக்கள்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

dmk incident in thiruvarur

 

தஞ்சாவூரில் பேக்கரியோடு உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகிகள் பேக்கரியை சூரையாடப் பொதுமக்கள் திமுகவினரை அடித்து துவைத்து படுக்க வைத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர திமுக இளைஞரணி  செயலாளர் சுதாகர், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாண்டவர், மாணவரணி துணை செயலாளர் முருகேசன் உள்பட 8 பேர் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே உள்ள ஒரு பேக்கரியுடன் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த பாட்டில்களை உருட்ட கடையிலிருந்த பெண் ரேவதி கேட்டதால் வாக்குவாதம் செய்து பணம் தராமல் போயிடுவோம் என்று பேசிக்கொண்டே கடை பெண் ஊழியரைத் தொட முயன்றுள்ளனர்.

 

அப்பொழுது பேக்கரியில் இருந்த உரிமையாளர் ஆனந்த மகன் வசந்த் ஆகியோர் என்ன பிரச்சனை என்று கேட்ட போது அவருடனும் தகராறில் ஈடுபட்டதால் உடனே மற்றொரு ஊழியர் கடை உரிமையாளர் சூரக்கோட்டை ஆனந்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் பேக்கரி சூரையாடப்பட்டு விட்டது. பேக்கரி உரிமையாளர் ஆனந்த் வரும் போதே கிராமத்தினர் பலரையும் அழைத்து வந்ததால் அவர்கள் பேக்கரியை உடைத்து தகராறில் ஈடுபட்ட மன்னார்குடி திமுக பிரமுகர்களை அடித்து உதைத்து யாரும் எழ முடியாத அளவுக்கு தாக்கி படுக்க வைத்துவிட்டனர். 8 பேரில் 2 பேர் ஓடி ஒழிந்து கொண்டதால் மீதமிருந்த 6 பேரும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

dmk incident in thiruvarur

 

அதேபோல திமுகவினர் தாக்கியதில் காயமடைந்த பேக்கரி ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடை பெண் ஊழியர் ரேவதி, மன்னார்குடிக்காரர்கள் 6 பேர் மீதும் மன்னார்குடி பாண்டவர் கொடுத்த புகாரின் பேரில் பேக்கரி ஊழியர்கள் உள்பட 9 பேர் மீதும் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம். சமாதானமாக போகலாம் என்று மன்னார்குடி திமுக புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே மன்னார்குடி திமுகவினரோ.. திமுக தலைமை வரை தகவல் போய்விட்டதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்களை நீக்கம் செய்யப் போகிறார்கள் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.