கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் கடந்த 29-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் இந்த கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்க கோரி தமிழக முதல்வருக்கு தி.மு.க.வின் தோழமை கட்சிகள் கடிதம் எழுதியுள்ளது. மும்மொழிக் கல்விக் கொள்கையை திணிக்கும் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கவேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.