![coronavirus prevention dmk chief mkstalin discussion with govt officers](http://image.nakkheeran.in/cdn/farfuture/PQ3p7h5xS1D0HchXgn8mitQYxZGNMBM8Jws3NQt_Xdg/1620122952/sites/default/files/inline-images/mks23232.jpg)
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளாக இன்றும் (04.05.2021) ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிதித்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று (04/05/2021) ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்து துறைகளும் சிறப்பாகக் கண்காணித்து செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
தற்போது மாநிலத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.
அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும், இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்யவும், வரும் சில நாட்களில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதைக் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.