DMK candidate intimidates voters ... !!

கடலூர் தொகுதி ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது காரணம் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக சார்பில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் போட்டி போடுகிறார். இவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் கடல் தீபன்,தேமுதிக சார்பில் ஞானபண்டிதன், மக்கள் நீதி மையம் சார்பில் ஆனந்தராஜ் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இருந்தும் திமுக வேட்பாளர் ஐயப்பன் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சம்பத் இருவருக்குமிடையே தான் பிரதானப் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

தற்போது ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தங்களது கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்த சலுகைகளையும் திட்டங்களையும் தாண்டி தங்கள் மனதுக்குப் பட்டதை எல்லாம் நிறைவேற்றித் தருவதாக மக்களிடம் மூட்டை மூட்டையாக வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்குகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் மக்களை நகைச்சுவையாகப் பயமுறுத்தி வித்தியாசமாக வாக்கு கேட்டுள்ளார். நேற்று பிரச்சாரத்திற்குச் சென்ற ஐயப்பன் சுத்து குளம் என்ற பகுதியில் வாக்கு கேட்டு திறந்த ஜீப்பில் மைக்கில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். ஏராளமான பெண்களைப் பார்த்ததும் பிரசார வாகனத்தை நிறுத்திய அவர் அந்தப் பெண்களிடம் பேச ஆரம்பித்தார். ஓட்டு போடச்சொல்லி உங்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்துள்ளதாகக்கூறுகிறார்கள் என்றதும் பெண்கள் அப்படி யாரும் எங்களுக்குப் பணம் தரவில்லை என்று பதில் கூறுகின்றனர்.

அதையடுத்து ஐயப்பன் "ஓட்டு போடச்சொல்லி இன்றோ நாளையோ உங்களைத் தேடிவந்து பணம் தருவார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்க வேண்டாம் என்று நான் கூறவில்லை ஆனால் அப்படி வாங்கப்பட்ட பணத்தை வரும் ஆறாம் தேதி வரை யாரும் செலவு செய்யக்கூடாது. வீட்டிலுள்ள பெண்களது கணவர்களுக்குத் தெரிந்தால் அதை எடுத்துச் செலவு செய்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கும் தெரியாமல் பணத்தைப் பத்திரமாக மறைத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். வரும் ஆறாம் தேதி தேர்தல் அன்று உதயசூரியன் சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்த பிறகு அந்தப் பணத்தை எடுத்து நீங்கள் தாராளமாகச் செலவு செய்யலாம்.

Advertisment

DMK candidate intimidates voters ... !!

அதற்குள் அந்தப் பணத்தை எடுத்து நீங்கள் செலவுசெய்து வாக்கை மாற்றிப் போட்டால் உங்களுக்கு வாந்தி பேதி வரும் பாத்துக்குங்க. அந்த மாதிரி கேரள மந்திரவாதிகள் வச்சு செஞ்சுருக்கோம்" என்று கூற கூடியிருந்த பெண்கள் சிரித்தனர். "இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். அவர்கள் மாந்திரீகம் செய்யப் போகிறார்கள்" என்று அவர் கூறியதை பெண்கள் ரசித்து சிரித்தாலும், "திமுகவில் தற்போது முக்கியத் தலைவர்களின் குடும்பத்தினர் கோயில் கோயிலாகச் சென்று இறைவழிபாடு நடத்தி வருகிறார்கள். அது அவர்களது உரிமை என்று தலைவர்கள் ஒரு நியாயம் கூறுகிறார்கள். இப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் ஓட்டுப் போடாவிட்டால் வாந்தி பேதி வரும் என்று சொல்கிறார்" என்கிறார்கள் விமர்சிப்பவர்கள்.