Skip to main content

போட்டி போட்டுக்கொண்டு ரிப்பன் வெட்டிய 'தி.மு.க - அ.தி.மு.க'!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

DMK, ADMK Competitive open mini clinic


மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையோர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட போட்டியால் பரபரப்பு  ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையூர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் திறந்து வைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பின்னர், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ (தி.மு.க) சரவணன் திறந்துவைக்க அக்கட்சியினரும் ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. தி.மு.க.வினர் சரவணன் எம்.எல்.ஏ.வை வரவேற்று இடதுபக்கம் பேனரும், வலது பக்கம் அ.தி.மு.க தரப்பினரும் பேனர் வைத்தனர்.

 

இந் நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வினர் கட்சிக் கொடிகளைக் கட்டி இரு கோஷ்டிகளாக அங்கு திரண்டனர். சரவணன் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்தவுடன் தி.மு.க.வினர் மேளதாளத்துடன் வரவேற்றனர். அவர் ஊராட்சி அலுவலகத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ சரவணனும் மறுபடியும் கட்டிய ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க.வினர் 'ஜெயலலிதா வாழ்க!', 'எடப்பாடியார் வாழ்க!' என முழக்கமிட்டனர். அதேபோல், தி.மு.க.வினர் 'கலைஞர் வாழ்க!', 'ஸ்டாலின் வாழ்க!' என்று முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்டதால்  மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணக்கோலத்தில் நேர்முக தேர்வில் கலந்துகொண்ட புது மணப்பெண்...!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

The newlyweds who attended the interview

 

திருச்சி மாவட்டத்திற்கு 58 மினி கிளினிக்குள் அமைத்துக்கொள்ள தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 35 மினி கிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை - எளிய மக்கள் மருத்துவ வசதியினை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்  இந்த அம்மா மினி கிளினிக்கில், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (22.02.2021) நடைபெற்றது. 

 

இதில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் புதுமணப்பெண் ஒருவர் மணக்கோலத்தில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் - ராகவி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், செவிலியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த ராகவி மணக்கோலத்தில் தனது கணவருடன், நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார்.

 

 

Next Story

"முலாம் பூசி மினி கிளினிக் எனப் பெயர் மாற்றியுள்ளனர்!" - பூங்கோதை ஆலடி அருணா பேட்டி!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

Kalaingar's Auxiliary health centers are now becoming a Mini Clinic - poongothai MLA


தமிழகத்தில் தற்போது மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் பூங்கோதை அளித்த பேட்டி,

 

“தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த காலத்திலேயே கிராமப் புறங்களிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இணையாக துணை சுகாதார நிலையங்களை, கிராமங்கள் தோறும் ஆரம்பித்தார். அதில் செவிலியர், மருந்தாளுனர் நிரந்தரப் பணியில் இருந்தனர். 


சிறு நோயான காய்ச்சல், வயிற்றுப் போக்கு காரணமாக வரும் நோயாளிகளுக்கு ஆரம்பக் கட்ட வழிவகை செய்து உடனே அவர்களை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைப்பார்கள். அப்படி கலைஞரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 'சப்-சென்டர்' எனப்படும் துணை சுகாதார நிலையத்தைத்தான் முலாம் பூசி தற்போது மினி கிளினிக் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மினி கிளினிக்கில் பகல் இரவு என இரண்டு டாக்டர்கள், செவிலியர்கள் மருந்தாளுனர்கள் இருக்க வேண்டும்.

 

Kalaingar's Auxiliary health centers are now becoming a Mini Clinic - poongothai MLA


ஆனால், தற்போதைய சூழலோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு துணை சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. மேலும் மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம், தேர்வு எழுதிய டாக்டர்கள், எட்டு வருடமாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 

 

நிலவரங்கள் இப்படியிருக்க, தற்போது துவங்கப்படும் மினி கிளினிக்குகளுக்குத் தேவையான டாக்டர்கள் செவிலியர்கள் மருந்தாளுனர்கள் எந்த வகையில் நிரப்பப்படுவர். மினி கிளினிக் எப்படிச் செயல்படும் என்பது கேள்விக்குறி. ஏனெனில், ஆரம்ப சுகாதார நிலைங்களிலேயே டாக்டர்கள் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை. அப்படியிருக்க மினி கிளினிக்குகளின் செயல்பாடுகள் சாத்தியப்படுமா என்பதுதான் என்னுடைய கேள்வி” என்றார் எம்.எல்.ஏ பூங்கோதை.