தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை நடத்துவதற்குகான பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவை தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் இவர்களின் பிரச்சாரங்கள் நடந்துவர மறுபுறம் இந்தக் கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (30/01/2021) சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க.வின் அனைத்து சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "அ.தி.மு.க. கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து நாளை (31/01/2021) முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்" என்றார்.