தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் மார்ச் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மார்ச் 6-ஆம் தேதியும், தென்காசி, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மார்ச் 7ஆம் தேதியும், மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மார்ச் 8-ஆம் தேதியும் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.