விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று இந்திய நாட்டின் 75வது விடுதலை திருநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்துவருகிறார் விஜயகுமார் என்ற இளைஞர்.
இவர் கடந்த மாதம் அப்பகுதி சாலையில் கிடந்த பத்து சவரன் தங்க நகையைக் கண்டெடுத்துள்ளார். வறுமை நிலையில் உள்ள அவர் அதை தாமே எடுத்துக் கொண்டிருக்கலாம், அதை தன் குடும்பத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இது யாரோ உழைத்துச் சம்பாதித்த தங்க நகை. இது நமக்குத் தேவை இல்லை. நம் உழைப்பையே நாம் நம்ப வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் சாலையில் கண்டெடுத்த அந்த 10 சவரன் தங்க நகையை உடனடியாகக் கொண்டு சென்று விழுப்புரம் மேற்குக் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இவரது நேர்மையைக் கண்டு அங்கிருந்த காவல்துறையினர் பாராட்டி உள்ளனர். இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், விஜயகுமார் குறித்து வருவாய்த் துறையினர் மூலம் உரிய விசாரணை நடத்தி உள்ளார்.
அதன்மூலம் அவருக்கு குடியிருக்கச் சொந்த வீடு கூட இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மூலம், வீட்டு மனையைத் தேர்வு செய்து அதற்கான பட்டா உத்தரவை நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது விஜயகுமாருக்கு வழங்கினார். இது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விஜயகுமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, “இது நேர்மைக்குக் கிடைத்த பரிசு, இருந்தும் பரிசு பாராட்டுகள் கிடைக்கும் என்பதற்காக அந்த 10 சவரன் நகையை நான் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை.
என் மனசாட்சிப்படி அது யாருடைய பொருளோ என்னவோ. அது நமக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான் அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தேன். என் நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் எனக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளது பெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது. இதற்காக எனது செயல் குறித்து செய்தித் தகவல்களை வெளியிட்ட அனைத்து ஊடகங்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.