சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மலை கிராம மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட 19 மலைக் கிராமங்களில், வியாழக்கிழமை (மே 12) மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு, மலைவாசிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் சாலை வசதி, பேருந்து வசதி, விளையாட்டு அரங்கு வசதிகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதையடுத்து ஆட்சியர், ராமானுஜபுரம் மற்றும் முட்டல் சாலையை பார்வையிட்டார். முட்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு நடுநிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து பூமரத்துப்பட்டி மலைக் கிராம மக்களைச் சந்தித்தார். சாலை வசதி, சமுதாயக்கூடம் மற்றும் காய்கறி தளம் உள்ளிட்ட வசதிகளைக் கோரி மனு அளித்தனர்.
மலைக் கிராம மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை விரைவாக செய்து முடிக்க துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார். ராமானுஜபுரம் கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 195 பயனாளிகளுக்கு 3.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் (ஆத்தூர் கோட்டம்) சுதாகர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.