தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் ஒரே நாளில் 6,016 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அரசின் இலவச சேவைகளுக்கு கையூட்டு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்வது. மருந்துகளை கூடுதல் விலை வைத்து விற்பது போன்றவற்றில் ஈடுபடுதல். அதேபோல் அரசின் இலவச சேவைகளை வழங்க பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுதல் போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது பணி நீக்கம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு நடக்கக் கூடிய இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்'' என எச்சரித்துள்ளார்.