'அரசுப் பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் 10 பேர் தாங்கள் விரும்பும் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து +1, +2 படிக்க ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு முழு கல்விக் கட்டணத்தை கட்டும். அதே போல, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் 10 பேர் அவர்கள் விரும்பும் சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்க அரசு கல்வி செலவை ஏற்கிறது. இப்படி கடந்த 14 வருடங்களுக்கு மேலாக அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் 20 மாணவ மாணவிகளை அரசே, தனியார் பள்ளிகளில் சேர்த்துவருகிறது.
இது பற்றி பல வருடங்களுக்கு முன்பே நக்கீரன் செய்தி வெளியிட்ட போது, திமுக அரசு கொண்டு வந்த திட்டம். இதை மாற்றுவோம் என்று அப்போதைய அதிமுக அரசு சொன்னது. ஆனால், இன்று வரை மாறவில்லை. மாறாக 6 முதல் +2 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்து தங்கள் கனவைத் தொலைத்துவிட்டு வேதனையில் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாணவி தான் திருநெல்லிவயல் ராகவி என்ற மாணவி.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள தினையாக்குடி ஊராட்சி திருநெல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி தூய்மைக் காவலர் முனுசாமி மகள் ராகவி. அருகில் உள்ள கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2017ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து 481 மதிப்பெண் பெற்றதால் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவி விரும்பும் தனியார் பள்ளிக்கு +1, +2 படிக்க ஆணை வழங்கியது. தான் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு தனியார் பள்ளியில் படித்தார்.
+2 முடித்தவுடன் நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைந்தாலும் மருத்துவப் படிப்பிற்கு 7.5 இட ஒதுக்கீட்டில் தனக்கு படிக்க சீட் வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் நீங்கள் 2 வருடம் தனியார் பள்ளியில் படித்ததால் 7.5% உள் ஒதுக்கீடு தங்களுக்கு பொருந்தாது என்று கூறிவிட்டனர். மீண்டும் இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 297 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் சீட் கேட்டு விண்ணப்பித்த போதும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து மாணவி ராகவி கூறும் போது, “அரசுப் பள்ளியில் நல்லா படிச்ச என்னை அரசு துறை தான் தனியாரில் படிக்க அனுப்பி வைத்தது. ஆனால், இப்ப அரசு ஒதுக்கீடு இல்லை என்று எங்களை ஏமாற்றி வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் என்னை தனியார் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த வருடம் மருத்துவ சீட் கிடைக்கும். ஆனால் ஏமாந்துவிட்டோம். இறுதி முடிவு முதலமைச்சர் தான் எடுக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் நேரடியாக முதலமைச்சரை பார்க்க முடியாது அதனால் ஊடகங்கள் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைத்துவிட்டு காத்திருக்கிறேன்” என்றார்.