திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், திருச்சியில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர், தான் படித்துவரும் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இவர் திடீரென நேற்று விடுதியின் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவருடைய கால் மற்றும் விலா எலும்பு முறிந்துள்ளது. விடுதியில் இருந்த நிர்வாகிகள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கோட்டை காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மாணவியின் பெற்றோர் தங்களுடைய கட்டாயத்தின்படிதான் மாணவி விடுதியில் சேர்க்கப்பட்டார். அதனால், புகார் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் கல்லூரி நிர்வாகமும் தாங்கள் எந்தவித புகாரும் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது காவல்துறையினர் இது குறித்தான ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், மாணவி முதல் முறையாக விடுதியில் தங்கி படிப்பதால் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற சிந்தனையோடு மன உளைச்சலுக்கு ஆளாகி இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.